Monday 26 October 2015

ஜொலிக்கும் அப்பாக்களா நீங்கள்? அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்?

அப்பா-அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்?

புரிந்துகொள்ளும் பக்குவம் நிறைய இருந்ததில்லை. ஒரு மகளாய் அப்பாவிடம் எதிர்பார்த்த குணங்கள் அதிகம். அதில் நிறைய ஏமாற்றம் இருந்தபோதும் அன்பைக் காட்டுவதில் குறைசொல்லவே முடியாது. எப்போதும் பேச்சு அதிகாரமான அன்பாகத்தான் இருக்கும். அது அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும் என்று ஏக்கமாய் இருந்த நாட்கள் அதிகம். அப்பாவின் தனிப்பட்டக் குணத்தில் நிறைய கருத்துவேறுபாடுகள் உண்டு. ஆனால் எத்தனைக் கோபமாய் இருந்தாலும் "என்னடா? சொல்லுடா" என்றுக் கேட்டுவிட்டுத்தான் கோபத்தையேக் காட்டுவார். அந்த வார்த்தையிலேயே கோபம் கொஞ்சம் அடங்கிப்போய்விடும்.

அப்பா எதிர்பார்த்த மகளாய் நானில்லை என்பதில் அப்பாவுக்கு நிறைய வருத்தம் உண்டு. அப்பாவின் மகளாய் இருந்து எதுவும் செய்யமுடியாமல் போன வருத்தம் எனக்கும் நிறைய உண்டு.

அபியும், நானும் படத்தில் மகள் அப்பாவின் சட்டையக் கழட்டி இன்னொருவருக்குக் கொடுத்ததும், கொஞ்சம் அதிர்ச்சியாகி கூச்சத்தில் நெளியும் அப்பா உடனே சிந்தித்து...மகளின் தனிப்பட்டக் குணத்தில் அசந்து...என் மகள் செய்த நல்லக்காரியத்தில் நான் தலைநிமிர்ந்து நடக்கவேண்டுமே என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்துபோவார். அந்த சீனைப் பார்க்கும்போதெல்லாம், என் அப்பாவிடம் நான் எதிர்பார்த்ததும், அவர் என்னிடம் தவறவிட்டதும் கொஞ்சம் கண்ணீரை வரவழைக்கும். இந்த இடத்தில் அப்பாவின் மகளாக இருக்கமுடியாமல் நான் தடுமாறிய நாட்கள் அதிகம். நான் நானாக இருக்கவிடாத அப்பாவின் அதிகார அன்பின் மேல் நிறையக் கோபமும், வருத்தமும் உண்டு.

ஒரு அப்பாவாய் இருப்பதில் மட்டுமே ஆணுக்கு எந்தப் பெருமையும் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளும் முதல் ஹீரோ அப்பாதான் என்று குழந்தைகள் அசந்து நிற்கும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அப்பா அப்பாவாக ஜொலிப்பார்.
ஜொலிக்கும் அப்பாக்கள் அனைவருக்கும்....