Monday 26 October 2015

இது நம் நாடு, நம் சுதந்திரம், இதெல்லாம் ஒரு அசிங்கமா?! குடிக்கிறார்கள், குடிக்கிறார்கள்.... குடிப்பதில் ஒற்றுமை

குடிக்கிறார்கள், குடிக்கிறார்கள்....திரும்பும் இடத்தில் எல்லாம் ஆண்கள் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள் (இப்போது பெண்களும் கூட).  அப்பாக்கள், அண்ணன்கள், கணவன்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று அனைவரும் பாரபட்சமின்றி குடிக்கிறார்கள். கிரிக்கெட் மேட்ச் நடந்தால் குடிக்கிறார்கள். நண்பர்களுடன் இருக்கும்போது குடிக்கிறார்கள். உறவினர்களைக் குஷிப்படுத்துகிறோம் என்று குடிக்கிறார்கள். மேலதிகாரியைக் கரெக்ட் செய்கிறேன் என்று குடிக்கிறார்கள். சந்தோஷமாய் இருக்கிறேன் என்று குடிக்கிறார்கள். சங்கடத்தில் இருக்கிறேன் என்று குடிக்கிறார்கள். குடிக்காமல் இருப்பவனை எதற்கும் லாயக்கில்லாதவன் என்று கிண்டலடிக்கிறார்கள். ரோட்டில் போகும்போது கூட்டமாய் இருக்கும் இடங்களிலெல்லாம் டாஸ்மாக் இருக்கிறது, ஏசி பார் இருக்கிறது. அதிலிருந்து வெளியே வருபவன் ஏதோ சாதித்துவிட்டதாய் பெருமையுடன் வருகிறான். இரக்கமனதுடன் இருப்பவனும் குடிக்கிறான். எகத்தாளமாய் பேசுபவனும் குடிக்கிறான். (எப்படி இருந்தாலும் குடிப்பதில் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்)

நிற்கும் இடத்தில் எல்லாம் இரண்டு பேர் குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் ரோட்டில் கிடக்கிறார்கள் (இது நம் நாடு, நம் சுதந்திரம், இதெல்லாம் ஒரு அசிங்கமா?! பிறந்த ஊர்ல பிறந்தமேனியாய் திரிஞ்சா என்னத்தப்புன்னு வடிவேலே சொல்லிருக்காரு...மைண்ட் இட்!). ரோட்டில் கிடக்காதவர்கள் வீட்டில் ஸ்டாக்வைத்துக் குடிக்கிறார்கள். மனைவிக்கும் ஊற்றிக்கொடுத்து சலம்பல் செய்வதை ர‌சிக்கிறார்கள். குடித்தவுடன் ஆண்மை பீறிக்கொண்டு வருவதாய் நினைத்துக்கொள்கிறார்கள். ஓவராய் கொஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள். யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நிறையக் கெட்டவார்த்தைப் பேசுகிறார்கள். நிறையத் தீனியை உள்ளேத் தள்ளுகிறார்கள். வாந்தியும் எடுக்கிறார்கள். அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் தேவைகள் நிறைய இருந்தும் குடிப்ப‌தற்காக செலவு செய்வதை நினைத்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.

ஒருவருக்கொருவர் ஊற்றிக்கொடுத்தால் பாசம் பொங்கி வழிந்துக் கட்டிப்பிடித்துக்கொ'ல்'கிறார்கள். அடுத்தவனது பங்கையும் சேர்த்து அடித்தால் முறைத்துக்கொள்கிறார்கள். 'அரசே இப்பிடி ஊத்திக்கொடுத்துக் கெடுக்குது, இதெல்லாம் ஒரு நாடு?' என்று திட்டித்தீர்ப்பவர்கள் டாஸ்மாக் லீவ் என்றால் பதறுகிறார்கள். ஸ்டாக் வாங்கி வைத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள். குடித்தவுடன் 'யாரையாச்சும் கொல்லணும்போல இருக்கு' என்பவர்கள் 'குடிப்போதையில் கொலைசெஞ்சேன்' என்று பேட்டிக்கொடுப்பவனைத் தாரளமாய்த் திட்டித் தீர்க்கிறார்கள்.

சினிமா காமெடியன்களையும் விஞ்சி நிற்கும் உலகமகா காமெடி பீஸ்கள் என்றால் அது நம் 'குடி'மகன்கள் மட்டும்தான்.

குஷியாக இருந்தேன், குஷிப்படுத்தினேன் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் ஒரு அவசரத் தேவைக்கு யாருக்காவது ப்ளட் டொனேட்கூட பண்ணமுடியுமா என்று யோசித்தால் குடித்ததில் சாதித்தது என்ன என்று கேள்வி வராமல் இருக்குமா? ரோட்டில் மட்டையாகிக் கிடப்பவனை மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனவனாக நினைத்தால், யாருக்கும் பலனில்லாத இந்த உடல் இருந்தாலென்ன? போனாலென்ன? என்று சர்வசாதாரணமாய் நினைக்கத்தோன்றுகிறது.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் யாருக்காவது பயன்படட்டும் என்ற சிந்தனை உள்ளவன் தன் உடம்பைப் பொக்கிஷமாய் பாதுகாப்பான், கொண்டாடுவான். இந்த உலகத்துக்கு ஒன்றுமே செய்யமுடியாவிட்டாலும் வந்ததன் அடையாளமாய் இந்த உலகத்துக்கு விட்டுச்செல்லமுடிவது இந்த உடல் உறுப்புகள் மட்டும்தான் என்பது என் எண்ணம். அது இல்லாதவனுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். அதை என்றாவது ஒருநாள் நாமாக உணரும் நேரத்தில் நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இல்லாமலே போகலாம்.